Sunday, 29 March 2020

கொஞ்சம் எழுத நினைத்தால் நிறைய படியுங்கள்

ஆம் நீங்கள் கொஞ்சமாவது நல்ல தரத்துடன் எழுத வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் நிறைய கவனிக்க வேண்டும். வணக்கம் நான் உங்கள் அரவிந்த் இது என்னுடைய அடுத்த பதிவு, நிறைய நாட்கள் களித்து , இப்போது சிறு இடைவேளையில் நாம் அனைவரும் இருப்பதால் எனக்கு இதை எழுதத் தோன்றியது , நேரம் கிடைத்தது நீங்கள் இதை கண்டிப்பாக படிப்பீர்கள் என்று நினைக்கிறேன் ஏனென்றால் காலம் அப்படி இருக்கிறது வாங்கல் பதிவிற்குள் போவோம். 

இங்கு எழுத்தாளர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள் ? ஒருவனை எது நல்ல எழுத்தாளன் ஆக்குகிறது ? ஒருவனது வாழ்க்கையில் ஏற்படும் அனுபவம் அவனை நல்லதொரு எழுத்தாளன் ஆக்குகிறது . அப்படிப்பார்த்தால் நம்மை சுற்றி சற்று அதிகமாகவே எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் பெரும்பாலானவர்கள் எழுதுவதில்லை இதுதான் நிதர்சனம்.

என் அப்பா கூறும் அவரது அனுபவங்களை கவனித்தாள் எனக்கு ஒன்று தோன்றும் "நம்ம டாடி ஒரு ரைட்டர் ஆகியிருந்தால் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்,கே டப் கொடுத்திருப்பார் னு " அவ்வளவு அனுபவம் அவர் குள்ள இருக்கு . 

என் தாத்தா அவரை விட ஒரு படி மேல் . நாங்க எங்கேயாவது வெளியே செல்லும்போது வழியில் ஏதாவது ஒரு குளமோ அல்லது ஒரு ஆற்றையோ பார்த்துட்டா போதும் அது 1970களில் எப்படி இருந்தது,  1980களில் எப்படி இருந்தது முதல் இப்போது எந்தெந்த நாய்கள் அதில் மணல் திருட்டு செய்கிறார்கள் என்பது வரை சொல்லிவிடுவார் .  நான் ஒரு பேச்சுக்கு ஆறு குளம் பற்றி கூறினேன் ஆனால் அதையும் தாண்டி பல விஷயங்கள் அவர் இன்று பார்த்தாலும் கூறுவர் . என் சிறுவயதில் அவர் கூறுவதை முழுமையாக நான் கவனிக்க மாட்டேன் சலிப்பாக இருக்கும் . ஆனால் இப்போது நன்றாக கவனிக்கிறேன் ஏனென்றால் பல விஷயங்களை நான் அவரிடமிருந்து கற்றுக் கொள்கிறேன்.

அதேபோல் இப்பொழுது நான், எனக்கு பழக்கம் இல்லாத மூன்று பெரியவர்கள் பற்றியும் , அவர்களது அனுபவம் என்னுடன் பகிர்ந்தது பற்றியும் , அதில் நான் கவனித்ததையும் உங்களுடன் பகிர போகிறேன்.

முதலாம் நபர் இவரை நான் ஒரு வருடம் முன்பு எனது ''என்கதை" குறும்படத்திற்கு டப்பிங் செய்ய கோவை காந்திபுரம் சென்றிருந்தபோது , காந்திபுரம் புறநகர் பேருந்து நிலையத்தில் சந்தித்தேன். 

நான் ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தேன் , என் பக்கத்தில் அந்த பெரியவர் அமர்ந்திருந்தார் நல்ல நிறைத்த முடி , வழுக்கை இல்லை ,  அடர்ந்த தாடி சொல்லப்போனால் "நானும் ரவுடிதான்" படத்தில் வரும்  ராகுல் தாத்தாவைப் போல் இருக்கும் அவரது தோற்றம் ஆனால் பேச்சு நல்ல கம்பீரமாகவே இருந்தது வயது 65 முதல் 70 குளிருக்கும். நான் அமர்ந்து இருக்கும் வேளையில் ஒரு பெண் கையில் ஒரு தட்டு வைத்து அதில் அரிசி,  வெற்றிலை, பாக்கு போட்டுக்கொண்டு என் அருகில் வந்து "எனக்கு கல்யாணம் நடக்க போகுது அதுக்கு உங்களால முடிஞ்ச உதவி பண்ணுங்க" என்று கூறினார் நான் பத்து ரூபாய் எடுத்து அந்த தட்டில் வைத்தேன். பின்பு அந்த தாத்தாவிடம் அவள் பணம் கேட்டாள் அவர் "போமா" என்று சொல்லி அனுப்பிவிட்டார் காசு கொடுக்கவில்லை. பின்பு அவர் என்னிடம் வந்து " இந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு காசு கொடுக்காதீர்கள் தம்பி இதே பொழப்பா சுத்துறாங்க கை கால்லாம் நல்லாத்தானே இருக்கு ஏதோ கடைக்கு வேலைக்கு போகலாம் இல்ல" என்றார் நான் "சரி ஐயா" என்று மட்டும் தான் கூறினேன் பின்பு அவர் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினார் "ஏதாவது 9க (திருநங்கைகள்) அவங்க காசு கேட்ட அவங்க கிட்ட கொடுங்க தம்பி பாவம் 2ம் கட்ட வாழ்க்கை அவர்களுக்கு" என்றார் நானும் "சரி ஐயா "என்றேன்.

பின்பு அவர் பஸ்ஸில் ஒரு திருநங்கைக்கு லிப்லாக் (உதத்தில் முத்தம்) கொடுத்த அனுபவத்தைக் கூற ஆரம்பித்தார் , ஆமாம் நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள் நீங்கள் படித்ததை தான் நானும் எழுதியிருக்கிறேன் ஒரு எழுபது வயது பெரியவர் ஒரு திருநங்கைக்கு லிப்லாக் பேருந்தில் கொடுத்த அனுபவத்தை தான் எனக்கு கூற ஆரம்பித்தார் எனக்கும் கொஞ்சம் சாக்காக தான் இருந்தது அவர் கூறுவது ஆனாலும் இன்ட்ரஸ்டிங்கா இருந்தது நான் மேலும் கேட்க ஆரம்பித்தேன்.

அவர் ஒருமுறை பேருந்தில் நின்று கொண்டிருந்தபோது சில திருநங்கைகள் வந்து சிலரிடம் காசு கேட்டார்களாம் தொடர்ச்சியாக யாருமே காசு தரவில்லையாம், பின்பு இவரிடம் வரும் போது இவருக்கு பாவமாக தோன்றி ரூபாய் 50 அவர் திருநங்கையிடம் கொடுத்தாராம் அப்போது பட்டு என்று அவரது உதட்டில் அந்த திருநங்கை முத்தமிட்டு விட்டாராம் இவர் செல்லமாக முதுகில் அடித்து விட்டு " போ கழுதை" என்றாராம். அங்கே பேருந்தில் இருந்த அனைவரும் இவரை ஒரு மாதிரி பார்த்தார்கள் என்று அவர் மிகுந்த ஆர்வமுடன் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பின்பு அவர் கூறினார் " அப்போ அங்க இருபது வயசுல இருந்த வடக்கு பசங்களா என்ன ஒரு மாதிரி பொறாமையா பார்த்தாங்க தம்பி" என்றார் எனக்கு சிரிப்பு வந்து விட்டது நான் "நெஜமாவா தாத்தா" என்றேன் அவர் "ஆமா தம்பி" என்றார்.

பின்பு நான் கூறினேன் " நான் அவங்க சமைச்ச பிரியாணி எல்லாம் சாப்பிட்டு இருக்கேன் செம டேஸ்ட்ஆ பண்ணுவாங்க" என்றேன் அவரும் "ஆமா தம்பி பிரமாதமா பண்ணுவாங்க'' என்றார் அவர் இருக்கும் தெருவில் சில திருநங்கைகள் கேட்டரிங் காண்ட்ராக்ட் எடுத்து பண்ணுகிறார்கள் அதில் சாப்பிட்டு இருப்பதாகவும் கூறினார். பின்பு அவர் சொன்னார் "பரவால்ல தப்பான தொழில் எதுவும் பண்ணாம இந்த மாதிரி செய்யறாங்க அதுவே நல்லது" என்றார் நான் "ஆமாம் தாத்தா" என்றேன் டக்கென்று அவர் அந்த திருநங்கைகளுக்கு மார்க்கெட்டிங் செய்ய தொடங்கிவிட்டார் . அப்போது சரியான நேரத்தில் என் நண்பர்கள் டப்பிங் செய்ய வந்துவிட்டார்கள் . பின்பு அவர் ஒரு சீட்டு அவரது சட்டை பையிலிருந்து எடுத்து,  நான் பேக் போட்டு இருந்தேன் என்னிடம் பேனா வாங்கி அதில் அவரது நம்பர் எழுதிக் கொடுத்திருந்தார் , நான் வாங்கிக் கொண்டேன் பின்பு அவரிடம் " வரேன் ஐயா " என்று கூறி விடைபெற்றேன் .ஏனோ தெரியவில்லை அவரோடு பேசியது பிடித்திருந்தது ஒரு ஐந்து நிமிடத்திற்குள் அற்புதமான கதை கூறிவிட இந்த வயது முதியவர்கள் தான் முடியும் என்று தோன்றியது. 

அடுத்த நபர்,  இது ஒரு ஏழு வருடங்கள் முன் நடந்த ஒரு நிகழ்வு இருந்தாலும் என் மனதில் நிற்கும் மறக்க முடியாத நினைவுகளில் டாப் 20 பட்டியல் எடுத்தால் அதில் இதுவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் . 

நான் பள்ளிக்கு எட்டாம் வகுப்பு முதல் தான் அரசு பேருந்தில் போயிட்டு வர தொடங்கினேன்.  ஆறாம் ஏழாம் வகுப்புகளில் பள்ளி வேனில் தான் செல்வேன் . எட்டாம் வகுப்பில் ஒரு நாள் வீடு திரும்புகையில் நானும் அப்போது என்னுடன் இருந்த நண்பன் மனோஜும் (இப்போது தொடர்பு இல்லை) இருவரும் ஒன்றாக ஒரு பேருந்தில் ஏறினோம் , கூட்டமாக இருந்தது , எங்கள் பள்ளிக்கு அடுத்த ஸ்டாப்பில் ஒருவர் இறங்க அந்த காலியான சீட்டில் அமர்ந்திருந்த சுமார் 7 வருடம் முன்பு 65 வயது இருக்கக்கூடிய ஒரு நபர் என்னை அழைத்து அவர் அருகே இருக்கும் இருக்கையில் அமரச் சொன்னார் நானும் அமர்ந்து கொண்டேன். என் எட்டாம் வகுப்பு நண்பன் மனோஜ் என் அருகே நின்று கொண்டன் . பின் அவர் எங்களிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார் முதலில் அவர் " எந்த வகுப்பு " , "எங்கே வீடு" என்பதுபோல் விசாரித்துக்கொண்டு இருந்தார் நாங்கள் அதற்கு பதிலளித்தோம் மேலும் அவர் பேச்சு கொடுத்த போது அப்போது சிறு வயது அல்லவா கடத்திட்டு போய் விடுவாரோ ? என்ற பயத்தில்"  ஏன் கேட்கிறீங்க ?" என்றேன் சரியாக அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்வியில் . 

அப்போது அவர் என்னவோ கேட்டார்,  ஆனால் என்ன கேட்டார் என்பது சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் அவர் கேட்டது நாட்டை காப்பாற்றியவன் இதைக்கூட தெரிஞ்சுக்க கூடாதா என்பதுபோன்ற பாணியில்தான்.

ஆமாம் அவர் " ரிடையர் மிலிட்டரி " என்று கூறினார். கூறும்போது எங்களுக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம் போகப் போக நம்பும் வாரு இருந்தது அவர் பேச்சு.

ஆரம்பத்தில் என்ன பேசினார் என்பது ஞாபகம் இல்லை ஞாபகம் உள்ளவரை குறிப்பிடுகிறேன். அவர் பார்டரில் இருந்ததை பற்றி குறிப்பிட்டார், அவருக்குப் பிடித்த துப்பாக்கி வகை பற்றி பேசும்போது  அவர் குறிப்பிட்டார் . நான் அவரிடம் எத்தனை கொலை பண்ணி இருக்கீங்க? என்று கேட்டேன் அவர் 26ஓ 27ஓ குறிப்பிட்டார் , ஆனால் தோராயமாக இல்லை துல்லியமாக தான் குறிப்பிட்டார். பின்பு அவரது போர் அர்ம்ஸ் பிடிக்கச் சொன்னார் நானும் பிடித்தேன் அவர் முறுக்கினாள் அவரது போர் அர்ம்ஸ் வேற லெவளாக புடைத்தது எங்களுக்கு பயங்கர ஆச்சரியம் அந்த போர் அர்ம்ஸ் பற்றி இப்போது நினைத்தாலும் ஆச்சரியம் தான். நான் என் ஜிம்மில் பல பாடி பில்டர்ஸ் ஓட போர் அர்ம்ஸ் பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த வகையில் இல்லை,  அந்த ஏதோ வகை துப்பாக்கியால் சுடும் போது இவ்வாறு வரும் என்று கூறினார். அவருடன் பேசுவது வியப்பாக இருந்தது பின்பு அவர் ரிடையர் ஆன பின்பு அவர் என்ன செய்கிறார் என்று மனோஜ் கேட்டான் என்று நினைக்கிறேன். அவர் கோவை மற்றும் பொள்ளாச்சியில் 11 கடைகள் வைத்து நடத்தி வருவதாக கூறினார் எல்லாம் சிறுபான்மையான கடைகள் மளிகை கடை, இளநீர் வண்டி, ஜூஸ் கடை , போன்று 11-ம் கூறினார் என்று ஞாபகம் உள்ளது, ஆனால் என்னவென்று ஞாபகம் இல்லை.

பின்பு அவர் பணி காலத்தில் வீட்டுக்கு வரும்போது அவரது தந்தை தினமும் காலை எழுப்பி விட்டு அவர் நாட்டுக்காக பணி செய்வதால் கையெடுத்து ஒரு கும்பிடு போட்டு வணங்குவாராம் . இது அவர் அப்போது கூறியது இப்போது நினைத்தாலும் புல்லரிக்கிறது  . பின்பு கல்யாணமானவர் தான் அவர் அது கேட்டதும் ஞாபகம் உள்ளது. 

நான் அவரிடம் அவருக்கு எத்தனை மொழிகள் தெரியும் ? என்று கேட்டேன் அவர் அவரது பையில் இருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து அதை காண்பித்து பின்னிருக்கும் அனைத்து மொழியும் தெரியும் என்று கூறி அனைத்தையும் படித்தும் காண்பித்தார் வியப்பு தான் எனக்கும் என் நண்பனுக்கும். ஆனால் அவர் பொய் சொல்லியிருப்பார் என்று இப்போது வரை எனக்கு தோன்றவில்லை. 

 கடைசியில் நான் இறங்கும் நிறுத்தம் வந்தது என் நண்பன் மனோஜுக்கு முதலில் கைகொடுத்தார் பின்பு என்னிடம் கைகொடுத்து " நீ பச்சைத்தண்ணில குளிக்கிறாயா , சுடு தண்ணீரில் குளிகிக்கிறாயா ? " என்று கேட்டார் நான் சொன்னேன் " வெயில் நாட்களில் அம்மா  பச்சைத்தண்ணில குளிக்க சொல்லுவாங்க மீதி நேரம் சுடு தண்ணீரில் தான் குளிப்பேன்" என்றேன் அவர் சிரித்தார் ஏன் கேட்டார் தெரியவில்லை, இறங்குவதால் நானும் கேட்கவில்லை , இது நிஜமாக நடந்த உண்மை வாசிக்கும் அனைவரும் நம்ப வேண்டும் அவர் சிரித்துவிட்டு '' உன்னோட பேச்சு நல்லா இருக்கு, எனக்கு ரொம்ப பிடித்திருக்கு" என்றார் நான் சிரித்து விட்டு இறங்கி விட்டேன்.
 
மறுநாள் நானும் என் நண்பன் மனோஜும் இவரைப்பற்றி வகுப்பில் அனைவரிடமும் , ஆசிரியர்களிடமும் சொல்லிக் கொண்டோம் அனைவரும் வியப்பானது என்று ஞாபகம் உண்டு. வியப்படைவதில் சந்தேகமில்லை ஏனென்றால் அவர் அப்படி எனக்கு இப்போது கூடவே வியப்பாக இருக்கிறது அவரை நினைத்தால்.  60 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே ஒரு வியப்பு தான் எவ்வளவு அனுபவத்தை பார்த்து வந்து இருப்பார்கள் . அதில் இவர் பெரும் வியப்பு ஏனென்றால் ராணுவத்தில் இவர் எத்தனை ஊர்கள் சென்றிருப்பார் , எத்தனை கடுமையான நிலமையில் தங்கி, உறங்கி, உணவு உண்டு இருப்பார் . அப்போது இவர் வாழ்க்கையில் எவ்வளவு இருக்கும் நாம் கற்றுக்கொள்ள , எவ்வளவு விஷயம் இருக்கும் வியப்படைய , எனக்கு இப்போது தோன்றுகிறது ஏன் பள்ளியிலிருந்து என் வீட்டிற்கு சுமார் நான்கு கிலோமீட்டர் தான் .  ஒரு இருபது முப்பதாவது கிலோமீட்டர் இருந்திருக்க கூடாதா என்று தோன்றுகிறது அப்போது நிறைய தெரிந்திருக்கும் எங்களுக்கும்,  நிறைய எழுத இருந்திருக்கும் எனக்கும் . 

அடுத்த நபர் இவரும் ஒரு இன்ட்ரஸ்டிங் . நான் பத்தாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் கண்டேன் , நான் குடும்பத்துடன் கோவையிலிருந்து விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு விருதுநகருக்கு ரயில்லில் சென்ற போது எதிர் சீட்டில் அமர்ந்திருந்த நபர் . நல்ல டீசன்டான தோற்றம்,  காலர் வைத்த டீசர்ட்டில் மூன்று பட்டண்களையும் போட்டு அந்த டிஷர்ட்டைப் இன் பண்ணி இருந்தார் . நல்ல கச்சிதமான உடற்கட்டு உடம்பில் கட்டிங்ஸ் எல்லாம் சிறப்பாக இருந்தது.
 
அவருடன் எப்படி பேச்சு ஆரம்பித்தது என்று தெரியவில்லை ஆனால் ஆரம்பித்துவிட்டது . அவர் ஒரு நாட்டு மருத்துவர் ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா பேசிக்கொண்டு வந்தார் .  என் அம்மா நன்றாக அவரிடம் பேசி நிறைய மெடிகல் டிப்ஸ் அவரிடமிருந்து கறந்துகொண்டார். 

அப்போது என் அப்பா அவரிடம் எவ்வளவு வயது ? என்று கேட்டார் அவரோ 63 என்றார் எங்களுக்கு பயங்கர ஷாக் , அனைவருக்கும் . பார்த்தால் அப்படி தெரியவில்லை ஐந்து வருடம் முன்னாடி என் அப்பாவிற்கு வயது 43 அவரை கூப்பிட்டு இவர் என் அப்பாவோட ஸ்கூல் மேட் இப்ப வரைக்கும் பிரண்ட்ஸ் என்று சொன்னால் நம்பிவிடும் தோற்றம்.  ஐந்து வருடத்தில் என் அப்பாவிற்கு தோற்றம் கூட கொஞ்சம் முதுமை ஆகிவிட்டது ஆனால் அவர் இருந்தால் அப்படியே தான் இருப்பார் அதில் சந்தேகமில்லை.

அதற்கு அவர் உடம்பையும் தோற்றத்தையும் எப்படி பாதுகாக்கிறார் ? என்று வழிகள் கூறினார் . அது நிச்சயம் பின்பற்றுவது கடினம் . நான் கூப்பிடுகிறேன் முடிந்தால் நீங்கள் பின்பற்றுங்கள்.  63 வயதில் அவர் பின்பற்றியது . 

*தினமும் காலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.

*ஒரு மணி நேரம் யோகா ஆசனங்கள் செய்ய வேண்டும்.

*63 வயது வரை அவர் கண்ணாடி போடவில்லை அதற்கு அரை மணி நேரம் தினமும் காலை கண் பயிற்சி செய்ய வேண்டுமாம் . அதை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லியும் கொடுத்தார். நீங்கள் என்னை நேரில் பார்க்கும்போது கேளுங்கள் நான் உங்களுக்கு சொல்லித் தரேன்.

*தினமும் அரை மணி நேரம் வாசிப்பு.

*தினமும் குறைந்தது 5 கிலோ மீட்டராவது நடைப்பயிற்சி செய்ய வேண்டுமாம்.

*எண்ணெய் அறவே சேர்க்கக்கூடாது , நாட்டுச்சர்க்கரை தான் இனிப்பிற்கு சேர்க்கணும்.  சைவம் தான் அவர் . 63 வயது வரை அவருக்கு பிபி ,சுகர், கொலஸ்ட்ரால் எதுவும் வந்தது இல்லையாம். 

*அவர் வீட்டில் டிவி இல்லை.

*தினமும் இரவு 8 மணிக்கு தூக்கம். இரவு 8 முதல் காலை 4 ,  8 மணி நேரம் நிம்மதியான தூக்கம் அதற்கு நடுவில் அவரது பணி.

இதுதான் அவரது தினசரி பழக்கம் . அவரது வாழ்வை அவர் இப்படி வடிவமைத்துக் கொண்டார்.  இதை நாம் பின்பற்றுவது கொஞ்சம் கடினம் தான் ஆனால் முடியாத காரியம் இல்லை ஆனால் இதைப் பின்பற்றினால் 20வயது இளமையாக தெரியலாம் அது சரிதான் சந்தேகம் இல்லை. பின்பு அவர் மகன் பேரன் பற்றி குறிப்பிட்டார்.

நடுவிலான விஷயம் ஒன்று. போகும்போது என் அம்மா மிச்சர் பாக்கெட் எடுத்து எங்களுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள் அப்பா , அம்மா , நான் , தங்கை . அனைவரும் சாப்பிட்டோம் . அவருக்குக் கொடுத்தபோது அவர் வாங்க மறுத்துவிட்டார் கேட்டால் பழக்கம் இல்லை என்றால் அப்போது வியப்பாக இருந்தது . '' நான் கேட்டேன் என்ன சார் சிகரட் , சரக்கு சொல்ற மாதிரி சொல்றீங்க? " அப்போ அவர் சொன்னார் எண்ணெய் உடம்பில் சேர்கிறது சிகரெட்,  சரக்கு அளவுக்கு இதுவும் பின்னாடி எஃபெக்ட் பண்ணும்னு . இருந்தும் என்ன பண்றது சிகரெட் , சரக்கு அடிக்கிறாவங்க அது கெட்டது ன்னு தெரிஞ்சும் அடிப்பாங்களே , அதே மாதிரி அவர் சொன்ன அப்புறமும் இந்த எண்ணெய் பலகாரம் நம்மளால விட முடியல.  அவர் ஒரு இரண்டு மணி நேரத்துல இறங்கிவிட்டார் . ஆனால் அந்த இரண்டு மணி நேரத்துக்குள்ள ரொம்ப ரொம்ப பெரிய பாடம் சொல்லிக் கொடுத்தார் உணவு பழக்க முறை எப்படி இருக்கணும்னு .  "அது சரியா இருந்தா என்ன மாதிரி இருக்கலாம் டா வயசானாலும்"  என்று சொல்வது போல் ஒரு லிவிங் எக்ஸம்பிளே அங்கிருந்து காட்டிவிட்டார். 

இப்போ ரீசண்டா ஒரு அண்ணா பெயர் குறிப்பிடப் போவதில்லை,  சில மாதங்கள் முன்னாடி ஏதோ பற்றி பேசும் போது இவர் டாபிக் வந்துச்சு அப்போ அவர் சொன்னார் " அவர் நிறைய வருஷம் வாழனும் டெய்லி செத்துகிட்டு இருக்காரு டான்னு " இருக்கட்டும் அவர் போல இல்லனாலும் இதை படிக்கும் அனைவரும் கொஞ்சமாவது தங்களது உடல்களை பேணுங்கள் ஏன் கூறுகிறேன் என்றால் , அதை சொன்ன அண்ணாவிற்கு வயது 25 க்கு குறைவு தான் ஆனால் அவரால் கீழே சம்மணங்கால் போட்டு உட்கார முடியாது. அவர் உடல் வாகு அப்படி.  இத நான் அவரை கிண்டல் பண்ணா எழுதவில்லை ஆனால் யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள். 

இதுதான் பெரியவர்கள் அவர்கள் எப்போதும் ஒரு வியப்பு தான் . நமக்கு தாத்தா-பாட்டி இருக்கும்பட்சத்தில் அவங்கள ஒதுக்காமல் நிறைய அவங்க கிட்ட பேசுங்க இப்போ நிறைய நேரம் வேற இருக்குது. 

இவங்க எல்லாம் எழுத்தாளர் ஆகாதது ஒரு வகையில் நமக்கு நல்லதுதான்.  நமக்கு காம்படிஷன் கொஞ்சம் குறைவுனு மனச தேத்திகனும் . அனுபவம் விளையாடுது சொல்லுவாங்களே அது இது தான் . நீங்க எழுத்தாளர் ஆகணும்னா முதல்ல வயசானவங்க  பேசுறத காது கொடுத்து கவனிங்க அது போதும்.

ஒரு பொதுவான விஷயம் என்னன்னா எனக்கு இந்த மூன்று பேரோட பெயர்களும் ஞாபகம் இல்லை அது ஒரு சின்ன வருத்தம் அளிக்கிறது.

கொஞ்சம் எழுத நிறைய கவனிங்க , ஏன் சொல்றேன்னா நான் இந்த கொஞ்சம் எழுத எனக்கு ஒரு எட்டு ஆண்டுகளாக நடந்த அனுபவத்தை பயன்படுத்தி இருக்கேன் நீங்க நிறைய கவனித்து அதிலிருந்து கொஞ்சமா எழுதும்போது அந்த எழுத்து தரமாக இருக்கும். 

எழுத்துக்கள் தொடரும்.... 




அரவிந்த்
28.03.2020
நள்ளிரவு 3.15

Friday, 20 March 2020

தனிமை 2

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

நான் அழுது கொண்டிருக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

நான் பயந்து போய் கிடக்கிறேன் . 
 
என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

ஒரு கோடை மழையில் , டீ கடையில் ஒதுங்கி சூடாக வடை போண்ட சாப்பிட்டவாறு ஒருவரிடம் கதைக்க வேண்டும் போல் இருக்கிறது . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

பேருந்தில் வீடு வரும் வரை , ஒருவரது தோல்களில் சாய்ந்து உறங்க வேண்டும் போல் இருக்கிறது . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

இரவு நேரத்தில் யாருடனாவது நெடுந்தூரம் நடந்து செல்ல வேண்டும் போல் இருக்கிறது . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

விடியும் வரை மொட்டை மாடியில் அமர்ந்து யாருடனாவது கதைக்க வேண்டும் போல் இருக்கிறது . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

கொட்டும் மழையில் கூட்டமாக சேர்ந்து கூத்தாட்டம் போட வேண்டும் போல் இருக்கிறது. 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

என் தோழிகளை ரசித்து ரசித்து புகைப்படம் எடுக்க வேண்டும் போல் இருக்கிறது . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

காம , குரோத , வக்கிர எண்ணங்கள் என்னை சூழ்கின்றது , அதிலிருந்து என்னை வெளியே கொண்டு வாருங்கள் . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் , 

என் இலட்சிய பாதையில் முன்னேற உதவுங்கள் . 

என்னை தனிமையில் விட்டு விடாதீர்கள் ......

~ அரவிந்த் மாணிக்கம் .

Thursday, 19 March 2020

தனிமை 1

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் ,

அடிக்கடி பச்சோந்தி போல் நிறம் மாறும் மனிதர்களிடம் இருந்து விளகி நிற்க ஆசை படுகிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

நான் நிறையா வாசிக்க , கொஞ்சம் எழுத நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

தொலைந்து போய் , திரும்ப வர வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

நான் என்னை நேசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

என் டைரியை படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

என்னுள் இருக்கும் கிறுக்கனை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

கதறி அழ வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

தியாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

ஒரு மரத்தடியில் தூங்க வேண்டும் என்று நினைக்கிறேன் . 

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் , 

நிர்வாணமாக ஒரு ஆற்றிலோ அல்லது குளத்திலோ நீந்த வேண்டும் என்று நினைக்கிறேன் .

என்னை தனிமையில் விட்டு விடுங்கள் .........

~ அரவிந்த் மாணிக்கம் .